search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கயம் காளைகள்"

    • சந்தையில் காங்கயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.38 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது.
    • பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் உலக புகழ்பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் உலக புகழ்பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

    இதனை தொடர்ந்து மாட்டு சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த காங்கயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த ஒரு மாத காலமாக பகல், இரவு நேரங்களில் அவ்வப்போது சாரல், மிதமான, பலத்த மழை பெய்தது. இதனால் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கிராமப்பகுதிகளில் காங்கயம் இன பசுமாடுகள் விரும்பி உண்ணும் கொழுக்கட்டை புற்கள் அதிக அளவில் பரந்து விரிந்து, பச்சை பசேலென்று நன்கு வளர்ந்து உள்ளன.

    இதனால் இப்பகுதி விவசாயிகள் காங்கயம் என பசுமாடுகள் கன்றுகள் வாங்கி வளர்ப்பதற்கு கடந்த 5 வார காலமாக மிகவும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த சந்தையில் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 100 காங்கயம் இன காளைகள், பசுமாடுகளில் மொத்தம் 67 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.

    இதன்படி சந்தையில் அதிகபட்சமாக காங்கயம் இன செவலை காளை கன்றுடன் மயிலை பசுமாடு ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தையில் காங்கயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.38 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.24 லட்சத்துக்கு காங்கயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    ×